/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வகுப்பறையில் மழைநீர் மாணவர்கள் வெளியேற்றம்
/
வகுப்பறையில் மழைநீர் மாணவர்கள் வெளியேற்றம்
ADDED : டிச 06, 2025 06:05 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் பாழடைந்த வகுப்பறை கட்டடத்தில் மழைநீர் ஒழுகியதால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இங்கு, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
வகுப்பறை கட்டடத்தை சரியாக சீரமைக்காததால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், வகுப்பறை கட்டடத்தில் ஆங்காங்கே மழைநீர் ஒழுகியது. இதனால் தரை பகுதி முழுதும் மழைநீர் படர்ந்து மாணவர்கள் அமர முடியாத நிலை ஏற்பட்டது. 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இம்மாணவர்கள் 6ம் வகுப்பு மாணவர்களுடன் அமர வைக்கப்பட்டனர். ஒரே வகுப்பறையில் 1 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமர வைக்கப்பட்டதால், பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடத்தை சீரமைக்க கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் கல்வித் துறைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

