/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்! நீர் நிலைகள் வறண்டு வருவதால் முன்னேற்பாடு தேவை
/
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்! நீர் நிலைகள் வறண்டு வருவதால் முன்னேற்பாடு தேவை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்! நீர் நிலைகள் வறண்டு வருவதால் முன்னேற்பாடு தேவை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்! நீர் நிலைகள் வறண்டு வருவதால் முன்னேற்பாடு தேவை
ADDED : மார் 05, 2024 11:49 PM
தியாகதுருகம் : பருவமழை குறைந்ததன் எதிரொலியாக நீர் நிலைகள் வேகமாக வற்றுவதால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல்இருக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்திற்கு, தென்மேற்கு பருவ மழை மூலம் 40 சதவீதமும் வடகிழக்கு பருவமழை மூலம் 60 சதவீத மழையும் கிடைக்கிறது. கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
சாத்தனுார் அணையின் பாசன நீர் மாவட்டத்தின் வட எல்லையில் உள்ள கிராமங்களுக்கு கிடைப்பதால் அப்பகுதியில் நீர் வளம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் மணலுார்பேட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் வரை 50க்கும் மேற்பட்ட ஊர்களின் குடிநீர் பூர்த்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 640 ஏரிகள் உள்ளன. பருவமழை சீராகப் பெய்யும் தருணங்களில் அணை, ஏரி, குளம் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்காக அந்தந்த பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. பருவ மழை குறையும் தருணங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல் மூலம் தண்ணீர் சப்ளையின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அதிகபட்ச மழையைத் தரும் வடகிழக்குப் பருவ மழை 20 சதவீதம் கூட பெய்யவில்லை. இதனால் 80 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை.
கல்வராயன் மலையில் பெய்த கன மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் மட்டுமே நிரம்பின. அவைகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து கிடுகிடுவென நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பருவமழை குறைந்ததன் எதிரொலியாக சில வாரங்களுக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக வற்றுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.
முக்கிய அடிப்படை தேவையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பது அவசியமாகும்.

