/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாதாள சாக்கடை கழிவு நீரால் பொது மக்கள் கடும் அவதி! உளுந்துார்பேட்டை நகராட்சி நிர்வாகம் திணறல்
/
பாதாள சாக்கடை கழிவு நீரால் பொது மக்கள் கடும் அவதி! உளுந்துார்பேட்டை நகராட்சி நிர்வாகம் திணறல்
பாதாள சாக்கடை கழிவு நீரால் பொது மக்கள் கடும் அவதி! உளுந்துார்பேட்டை நகராட்சி நிர்வாகம் திணறல்
பாதாள சாக்கடை கழிவு நீரால் பொது மக்கள் கடும் அவதி! உளுந்துார்பேட்டை நகராட்சி நிர்வாகம் திணறல்
ADDED : நவ 06, 2024 10:35 PM

உளுந்துார்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என அப்போதைய எம்.எல்.ஏ., குமரகுரு சட்ட சபையில் கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி உளுந்தூர்பேட்டைக்கு பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடர்ந்து ரூ. 38.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி நடந்தன.
இதில் 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்தன. பாதாள சாக்கடை திட்டத்தில் தெருப் பகுதிகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவதற்காக 6 நீர் ஏற்று நிலையங்களும், 2 நீர் உந்து நிலையங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு சேலம் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கீரனூர் ஏரியில் கொண்டு சென்று விடப்படுகிறது. இந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வந்தாலும் ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்னைகளால் தாமதம் ஏற்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.
ஆட்சி முடியும் தருவாயில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த 23.2.2021ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிச்சாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க., ஆட்சிக் காலத்திலும் பணிகள் நடந்தன.
பாதாள சாக்கடை அமைக்கப்பட்டதோடு வீட்டிற்கான கழிவுநீர் வெளியேற்றுவதற்கான பைப்லைன் இணைக்கப்படவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் கழிவு நீரை வெளியேற்ற வீட்டிற்கான பைப்லைன் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கான செலவின தொகையை வரிவசூலோடு சேர்த்து வசூலிப்பது என முடிவெடுத்து பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது வரை ஆயிரத்துக்கும் குறைவாக வீடுகளுக்கு மட்டுமே பைப்லைன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதியோடு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாகவும், நகராட்சியிடம் ஒப்படைப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகமும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுகிறது என தெரிந்த பிறகே நகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகள் மேற்கொள்ளும் என தெரிவித்து விட்டனர்.
மேலும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் ஏற்பட்டுள்ள அடைப்புகளை இயந்திரங்களை கொண்டு அகற்றி சரி செய்ய வேண்டும்.
ஆனால் அதற்கான இயந்திர உபகரணங்கள் உளுந்தூர்பேட்டை நகராட்சியிடம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து கழிவு நீர் அடைப்புகளை அகற்ற வேண்டிய நிலை உள்ளது.
தற்போது உளுந்தூர்பேட்டையின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி துர்நாற்றம் வீசுவதை தடுக்க ஒப்பந்த பணிகளை மேற்கொண்டுள்ள நிர்வாகம் அதனை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.