ADDED : செப் 30, 2024 06:38 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பூண்டு கிலோ 400 ரூபாய்க்கு உயர்ந்தது.
தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப் படுகிறது. இதில், நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதால் அதிக பேர் விரும்பி வாங்குவர்.
இதுபோக தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு கடந்த 10 நாட்களாக கிலோ 400 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய ரக பூண்டு 250 ரூபாயும், நடுத்தர பூண்டு 300 ரூபாயும், பெரிய பூண்டு கிலோ 400 ரூபாய்க்கும் விற்கப்படு கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'வரத்து குறைவு காரணமாக பூண்டு விலை அதிகரித்துள்ளது.
புது பூண்டு அக்டோபர் மாதத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரத் தொடங்கியதும் பூண்டு விலை குறையத் துவங்கும்' என்கின்றனர்.