/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கணவனை கொன்ற மனைவி ஆண் நண்பருடன் கைது
/
கணவனை கொன்ற மனைவி ஆண் நண்பருடன் கைது
ADDED : அக் 18, 2024 03:03 AM

கச்சிராயபாளையம்,:கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல், 43. இவரது மனைவி அருள்மொழி, 33. இவர்களுக்கு, 14 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த, 5ம் தேதி இரவு, வீட்டில் படுத்திருந்த தனவேல் காலையில் இறந்து கிடந்தார். அதிக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என கருதி, உறவினர்கள் தனவேல் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
கச்சிராயபாளையம் போலீசார், தனவேல் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், தனவேல் மூச்சுத்திணறி இறந்தது தெரிந்தது. அவரது மனைவி அருள்மொழியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் கூறியதாவது:
தனவேல் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அருள்மொழிக்கு கச்சிராயபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன், 31, என்பவருடன் பழக்கம் இருந்தது.
கடந்த, 5ம் தேதி இரவு, தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த அருள்மொழி, இரவு, 12:00 மணிக்கு, சரவணனை வீட்டிற்கு வரவழைத்தார். தனவேலின் கால்களை சரவணன் பிடித்துக்கொள்ள, அருள்மொழி தலையணையால் கணவனின் முகத்தில் அழுத்தி கொலை செய்தார். பின் அதிக மது குடித்ததால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
அருள்மொழி, சரவணன் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். சரவணனுக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.