ADDED : அக் 07, 2024 06:40 AM
கள்ளக்குறிச்சி: திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடக்கிறது. 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கப்படும். தகுதி உள்ள மாணவர்களை திறனறிக்குழுவினர் தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வர்.
போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறனும், இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் தெரிவித்தால், அதற்கான சரியான திருக்குறளை கூறுபவராகவும், திருக்குறளின் அடைமொழிகள் மற்றும் சிறப்புகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களும் தெரிந்திருக்க வேண்டும்.
தகுதியுடையவர்கள்www.tamilvalarchithrurai.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் வரும் 31ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.