/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்
/
அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்
ADDED : ஜன 20, 2024 05:52 AM

திருக்கோவிலுார் : ஆற்றுத் திருவிழாவையொட்டி, மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது.
மணலுார்பேட்டை, தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடந்தது. அதனையொட்டி, சுற்றுப் பகுதிகளில் இருந்த ஏராளமான உற்சவர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பட்டு நேற்று மதியம் 12:30 மணிக்கு மணலுார்பேட்டை வந்தடைந்தார். மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து அண்ணாமலையாரை வரவேற்று தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
தென்பெண்ணையில் தீர்த்தவாரி முடிந்து, அங்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று, திருக்கோவிலார் தென்பெண்ணையாற்றில் ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர், ஆஸ்பிடல் ரோடு சுப்பிரமணியர், அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர், வீரபாண்டி வீரட்டானேஸ்வரர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.