/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகள் திருட்டு தொடர்கிறது ...: விரைந்து சீரமைக்காததால் விவசாயிகள் கடும் அவதி
/
கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகள் திருட்டு தொடர்கிறது ...: விரைந்து சீரமைக்காததால் விவசாயிகள் கடும் அவதி
கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகள் திருட்டு தொடர்கிறது ...: விரைந்து சீரமைக்காததால் விவசாயிகள் கடும் அவதி
கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகள் திருட்டு தொடர்கிறது ...: விரைந்து சீரமைக்காததால் விவசாயிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 25, 2025 02:25 AM

கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம், நொச்சிமேடு, தொரடிப்பட்டு கிராமம் 2 என மொத்தம் 4 டிரான்ஸ்பார்மர்களில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு மின்மாற்றியில் உள்ள ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை கடந்த மாதம் திருடிச் சென்றனர்.
இதே போல் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பேட்டை மற்றும் கடத்துார் கிராமங்களில் உள்ள மின் மாற்றிகளிலும் கடந்த 2 தினங்களுக்கு முன் அதே பாணியில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
திருடு போன டிரான்ஸ்பார்மர்களுக்கு பதில் மீண்டும் புதிதாக அமைக்க இரண்டு வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகிறது. மின் துறை மூலம் டிரான்ஸ்பார்மர்கள் வருவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தனியார் துறை மூலம் ஓரிரு நாட்களில் மின்னமாற்றிகளை பெறலாம். அதற்கு ஒரு லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல இடங்களில் விவசாயிகளே ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த செலவில் மின்மாற்றிகளை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வீணாகிறது.
டிரான்பார்மர்களின் வகைகளை பொறுத்து அதில் 300 லிட்டர் முதல் 500 லிட்டர் வரை ஆயில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள மொத்த ஆயிலும் வடிந்த பின்பே உள்ளே உள்ள காப்பர் காயில்களை எடுக்க முடியும். இதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஆகும்.
இந்நிலையில் மர்ம நபர்கள் துணிகரமாக மின்சாரத்தை நிறுத்திவிட்டு சாவகாசமாக திருடிச் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் போலீசார் முறையாக கிராமப்புறங்களுக்கு ரோந்து பணி மேற்கொள்வதில்லை.
மேலும் முறையாக வாகன சோதனையும் செய்வதில்லை. நகர் புறங்களில் மட்டுமே பெயரளவிற்கு இரவு ரோந்து பணி மேற்கொள்கின்றனர்.
இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் தொடர்ந்து மின் மாற்றிகளை துணிந்து திருடிச் செல்கின்றனர். போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு மின் மாற்றி திருடும் கும்பலைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், திருடு போன மின் மாற்றிகளை மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.