ADDED : பிப் 28, 2026 05:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கரும்பு ஏற்றி சென்ற லாரி சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சுதாகர், 32; லாரி டிரைவர். இவர், சங்கராபுரம் அருகே உள்ள செட்டியந்தல் கிராமத்தில் இருந்து அறுவடை செய்த கரும்பை ஏற்றிக்கொண்டு பெண்ணாடம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு லாரியை ஓட்டி சென்றார்.
நேற்று மதியம் 2 மணியளவில் ஏமப்பேர் அருகே லாரி சென்ற போது, திடீரென எதிர் திசையில் வந்த மினிவேன் மீது மோதாமல் இருக்க லாரியை இடது புறமாக திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக டிரைவர் சுதாகர் காயமின்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

