த.வெ.க.,வினருக்கு தலைவலியாகும் எம்.எல்.ஏ., விவகாரம்
த.வெ.க.,வினருக்கு தலைவலியாகும் எம்.எல்.ஏ., விவகாரம்
UPDATED : நவ 19, 2026 10:02 PM
ADDED : நவ 19, 2026 10:02 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை கண்டித்து நாள்தோறும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருவதால், அக்கட்சியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், சர்ச்சைக்குரிய வகையில் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சமூக வலைதள பக்கம் முழுவதும் அதிகளவில் பரவி வருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் எம்.எல்.ஏ.,வை கைது செய்ய வேண்டும் என்றும், உடனடியாக தனது பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் நாள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ., விவகாரம் சமூக வலைதளம் மட்டுமின்றி, பொதுமக்களிடம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இவ்விவகாரத்திற்கு முன்பு நாள்தோறும் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்த நிலையில், தற்போது வெளியே தலைகாட்ட முடியாத நிலையால் அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் அவப்பெயரால் முடங்கி போன எம்.எல்.ஏ., பிரச்னைக்குத் தீர்வு வேண்டி கோவில் உள்ளிட்ட வெளி ஊர் என எங்கு சென்றாலும் ரகசியமாக சென்று வருகிறார். அதேபோல் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக நாள்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தால், அக்கட்சியினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இதற்கு எப்போது தான் தீர்வு ஏற்படுமா என்ற மனநிலையில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் அவரது மொபைலுக்கு தொடர்பு கொண்டாலும், போனையே எடுப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
