ADDED : செப் 20, 2024 08:29 PM
உளுந்துார்பேட்டை: விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் கோபாலகிருஷ்ணன், 35; டிரைவர். இவர், சிலை மற்றும் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வந்தார்.
பொம்மைகள் செய்வதற்காக மரவள்ளிக்கிழங்கு கழிவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலத்தில் இருந்து பஞ்சமாதேவி நோக்கி மினி சரக்கு வேனில் வந்து கொண்டிருந்தார்.
நேற்று காலை 6:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே, சென்னை மீஞ்சூரிலிருந்து மிஷனரி பொருட்களை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கிச் சென்ற மகேந்திரா மேக்ஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கோபாலகிருஷ்ணன், மகேந்திரா மேக்ஸ் மினி வேன் டிரைவரான ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த தொட்டியாலயம் பகுதியைச் சேர்ந்த கணேசன், 39; ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடன், அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.