/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு எப்போது: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
/
கள்ளக்குறிச்சியில் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு எப்போது: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
கள்ளக்குறிச்சியில் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு எப்போது: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
கள்ளக்குறிச்சியில் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு எப்போது: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
ADDED : நவ 01, 2024 06:43 AM
மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் கச்சேரி ரோடு, காந்தி ரோடு, சேலம் ரோடு, கச்சிராயபாளையம் ரோடு ஆகியன முக்கிய சாலைகளாக உள்ளன.
நகரின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், அரசு அலுவலங்கள், வங்கிகள் என அனைத்தும் இந்த சாலைகளில் இயங்குவதால், வாகன புழக்கம் அதிகம்.
அத்துடன் பஸ் போக்குவரத்தும் இச்சாலைகளில் அதிகம்.
இதனால், இச்சாலைகள் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் அவதியடைவது வாடிக்கையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பஸ் நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பு பகுதியில், 2007ம் ஆண்டு போக்குவரத்தை சீரமைக்க சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், வெள்ளோட்டம் மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் சிக்னல் இயங்கவில்லை. போலீசாரே நேரடியாக வாகனங்களை ஒழுங்குப்படும் மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகராமாக மாற்றப்பட்டதால், அரசு அலுவலங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், நகரில் வாகன புழக்கம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகரித்தது.
அதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, 2019ல் மீண்டும் புதிதாக சிக்னல்கள் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
ஆனால் பணிகளை முழுமைப்படுத்தாமல் மீண்டும் சிக்னல் முறை இயக்காமல் கைவிடப்பட்டது. முழுமையாக இயக்குவதற்கு தேவையான செயல்திட்டம் இல்லாமல், மீண்டும் கடந்த 2022ல் நான்கு முனை சந்திப்பு, சேலம் சாலை, துருகம் சாலை, சங்கராபுரம் சாலை என பல்வேறு பகுதிகளில் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. நான்கு முனை சந்திப்பு பகுதியில் மட்டுமே சோதனை முறையில் சிக்னலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இவைகளும் ஒரு மாதத்திற்கு மேல் இயங்கவில்லை. சிக்னல் இயக்குவதற்கான முறையாக செயல் திட்டங்களை வகுப்பதில், குளறுபடி காரணமாக சிக்னல் விளக்குகள் மீண்டும் காட்சி பொருளாக மாறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., என மாவட்ட அதிகாரிகள் இங்கேயே தங்கி பணி செய்து வரும் நிலையில், உயர் அதிகாரிகளும் அடிக்கடி வருகின்றனர். ஆனால் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து சிக்னலை இயக்கத்தை சீர்படுத்த மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
3 முறை புதிதாக சிக்னல் விளக்குகளை அமைத்தும், பல ஆண்டுகளாகியும் முறையாக இயக்குவதற்கான செயல்திட்டத்தை ஏற்படுத்தாததால், பல லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட சிக்னல் விளக்குகள் பயன்பாடின்றி பழுதடைந்து போய் வருகிறது.
எனவே கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சிக்னல் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

