/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.12.13 கோடியில் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டுவது எப்போது? விரைந்து பணிகளை துவங்க நடவடிக்கை தேவை
/
ரூ.12.13 கோடியில் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டுவது எப்போது? விரைந்து பணிகளை துவங்க நடவடிக்கை தேவை
ரூ.12.13 கோடியில் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டுவது எப்போது? விரைந்து பணிகளை துவங்க நடவடிக்கை தேவை
ரூ.12.13 கோடியில் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டுவது எப்போது? விரைந்து பணிகளை துவங்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 19, 2025 06:30 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்ட, ரூ.12.13 நிதி ஒதுக்கீடு செய்து, இரு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இன்னமும் பணி துவங்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி உருவாகி, செயல்பட்டு வருகிறது.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம், 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையின் கீழ் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 86 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,398 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
எஸ்.பி., அலுவலகம் கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேலாக, தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அங்கு தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், விரல் ரேகை பிரிவு கூடம், தடயம் சேகரிப்பு, தொழில் நுட்ப பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
நிதி ஒதுக்கீடு
இந்நிலையில் எஸ்.பி., அலுவலத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்,12 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வீரசோழபுரத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், சி.இ.ஓ., அலுவலகம் போன்ற அலுவலகங்கள், ஒருங்கிணைந்து கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
முதலாவதாக கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கின.
ஆனால் அந்த இடத்தில் அலுவலகங்கள் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சில ஆண்டுகள் பணிகள் முடங்கின.
இழுபறி
இதனையடுத்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் செப்., மாதம் கலெக்டர் அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகில், எஸ்.பி.,அலுவலகம் கட்டடம் கட்ட இன்னமும் இடம் தேர்வு செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளது. இதனால் அங்கு கட்டடம் கட்டுவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'தற்போது எஸ்.பி.,அலுவலகம் இயங்கி வரும் வாடகை அலுவலகத்தில், இட நெருக்கடி சிக்கல் உள்ளது. அதுமட்டுமின்றி, நிரந்தர கட்டடம் எப்போது கட்டப்படும் என்பது குறித்து இன்னமும் கூட முடிவு செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இடத்தை தேர்வு செய்து வழங்கினால், பணிகளை விரைந்து துவக்க வழி வகை ஏற்படும்,' என்றனர்.

