/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. எப்போது?: ஆக்கிரமிப்பாளர்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. எப்போது?: ஆக்கிரமிப்பாளர்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. எப்போது?: ஆக்கிரமிப்பாளர்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. எப்போது?: ஆக்கிரமிப்பாளர்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 23, 2025 11:42 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்துார்பேட்டை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்கேற்ப சாலை விரிவாக்கம் மேற்கொள்ளவில்லை. மேலும், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக உளுந்துார்பேட்டை பகுதி இருப்பதால் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த முக்கிய பகுதியாக உள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்துார்பேட்டையை கடந்து செல்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் பஸ் நிலைய பகுதி, திருச்சி செல்லும் சாலை, சென்னை செல்லும் சாலை, திருவெண்ணெய்நல்லுார் செல்லும் சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
சாலையோரம் மட்டுமின்றி சில இடங்களில் தார் சாலையே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் கடைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுகின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பஸ் நிலையம் முன்பு பேரிகார்டு தடுப்புகள் அமைத்தனர்.
இதன் மூலம் ஓரளவு வாகன போக்குவரத்து பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
இருப்பினும் பஸ் நிலைய பகுதியில் இருந்து பஸ்கள் வெளியேறும் சென்னை சாலை, திருவெண்ணைநல்லுார் சாலை, திருச்சி பஸ்சுகள் வெளியேறும் சாலையில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் அதிக அளவிலான வாகனங்கள் வருகையால், போக்குவரத்து நெரிசல் இருந்தது. தற்போது சாதாரண நாட்களிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், முதியவர்கள், வாகன விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
ஆக்கிரமிப்பு கடை வைத்திருக்கும் பெரும்பாலன கடைகள் ஆளும் கட்சியின் ஆசி பெற்றவர்கள். இதனால், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களை கண்டு காணாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

