தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சொட்டுநீர் பாசன குழாயின் ஆயுட்காலம்... குறைக்கப்படுமா?:மானியம் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல்

சொட்டுநீர் பாசன குழாயின் ஆயுட்காலம்... குறைக்கப்படுமா?:மானியம் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல்

சொட்டுநீர் பாசன குழாயின் ஆயுட்காலம்... குறைக்கப்படுமா?:மானியம் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல்


UPDATED : ஆக 19, 2026 04:03 AM

ADDED : ஆக 18, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 04:03 AM ADDED : ஆக 18, 2026 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் மானியம் பெற முடியும் என்பதை பரிசீலினை செய்து 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், அதிகளவு கிராமங்களை உள்ளடக்கி, விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்கு, கரும்பு, நெல், மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம் உட்பட பல்வேறு வகையான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

அனைத்து கிராமங்களிலும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததாலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, மேடான பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

தண்ணீர் பிரச்னை ஏற்படும் போது கிணற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி பயிரை காப்பாற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்துகின்றனர். அதாவது, கிணறு அல்லது குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை ஈர்த்து, பிளாஸ்டிக் குழாய் வழியாக செடியின் வேர்களுக்கு அருகில் புதைத்து தண்ணீரை சீராக பாய்ச்சுவது வழங்கும்.

இதன்மூலம், தண்ணீர் தேவையின்றி வீணாகுவதும், ஆவியாதலும் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மேலும், செடியின் வேருக்கு மட்டும் தண்ணீர் செல்லும், களை வளர்வதைத் தடுக்கவும், அதனை பறிக்கும் செலவும் குறைகிறது.

இத்துடன் உரங்களை கலந்து செடியின் வேருக்கு நேரடியாக அனுப்ப முடியும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்கின்றனர். அரசு மானியத்தில் ஒருமுறை சொட்டுநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் அடுத்த 7 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் மானியத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால், சொட்டு நீர் பாசன குழாய் 7 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சில விவசாயிகள் பயிருக்கு வெளியே சொட்டுநீர் பாசன குழாய் அமைத்திருந்தால் வெயில் பட்டு அதன் ஆயுட்காலம் சீக்கிரமாக குறையும். மேலும், விளைநிலங்களில் சுற்றித்திரியும் எலி, முயல் உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும், பாசிகள் மற்றும் உப்புகள் படர்வதாலும், தண்ணீர் அதிகமாக செலவாகும் நெல் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடி செய்யும் போதும் நிலத்தடியில் புதைத்த குழாய் வெளியே எடுத்து, மீண்டும் புதைப்பதாலும் சொட்டு நீர்பாசன குழாய் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

சொட்டுநீர் குழாய் மற்றும் அதன் உதிரி பாகங்கள் 7 ஆண்டுகளுக்குள் பழுதாகி வீணாகும் பட்சத்தில், விவசாயிகள் வேறு வழியின்றி திறந்த வெளியில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் விரைவில் குறைவதுடன், தண்ணீர் சேமிப்பு என்ற சொட்டுநீர் பாசன திட்டத்தின் நோக்கம் முழுவதுமாக நிறைவடையாமல் போகிறது.

எனவே, சொட்டு நீர் பாசனம் அமைத்த விவசாயிகள், 7 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் மானியம் பெற முடியும் என்ற அரசு நிர்ணயித்துள்ள கால அளவை மறு பரிசீலினை செய்து, 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us