கோமுகி ஆறு குறுக்கே உயர்மட்ட பாலம்... அமைக்கப்படுமா? கிராம பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கோமுகி ஆறு குறுக்கே உயர்மட்ட பாலம்... அமைக்கப்படுமா? கிராம பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 07, 2026 07:19 PM
ADDED : ஜூன் 07, 2026 06:20 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பல்வேறு பணிகளுக்காக தினமும் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரே செல்லும் வழியில் 5 கி.மீ., தொலைவில் க.மாமனந்தல் கிராமம் உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்ல குறுகிய மண் பாதை வழியாக 2 கி.மீ., தொலைவில் கோமுகி ஆற்றை கடந்து ரோடுமாமந்துார் வழித்தடத்தை கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக கோமுகி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றினுள் இறங்கி செல்ல வேண்டும்.
மேலும், விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த விளைபொருட்கள், செங்கல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை டிராக்டர் டிப்பர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் ஏற்றி கோமுகி ஆற்றை கடந்து எடுத்து செல்கின்றனர். பாலம் இல்லாததால் கரடு, முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். பருவ மழைக்காலங்களில் கோமுகி அணை திறக்கும்போது, ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும். அத்தருணத்தில் பொதுமக்கள் எளிதில் செல்ல முடியாது. மாறாக 5 கி.மீ., தொலைவிற்கு சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
கோமுகி ஆற்றில் சிறிதளவு தண்ணீர் செல்லும் போது, நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்படும் பொதுமக்கள், ஆற்றினை கடந்து எளிமையாக செல்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் ஆற்றினை கடந்து செல்ல முடியாது. சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடக்கின்றனர். பொதுமக்கள் நீண்ட துாரம் சுற்றி செல்வதற்கு சிரமப்பட்டு, கோமுகி ஆற்றினை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கையை மக்கள் பிரநிதிகள், கலெக்டர், அமைச்சர் உள்ளிட்ட அனைவரிடமும் அப்பகுதி மக்கள் மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படால் உள்ளது. எனவே, கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
