/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க அனுமதி... வழங்கபடுமா?: மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க அனுமதி... வழங்கபடுமா?: மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க அனுமதி... வழங்கபடுமா?: மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க அனுமதி... வழங்கபடுமா?: மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 03, 2025 07:15 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க அரசு அதிகாரிகள் அனுமதி அளிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்வராயன்மலை பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் மலை என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. பெரிய கல்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்தி 500 அடி உயரமும், சின்ன கல்வராயன்மலை 3 ஆயிரம் அடி உயரமும் கொண்டது. இதன் மொத்த நிலபரப்பு 57 லட்சத்தி 11 ஆயிரத்தி 124 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. கல்வராயன் மலையில் 145 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மலை வடக்கில் திருவண்ணாமலை, தெற்கில் சேலம், வடமேற்கில் தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகளும், சேலம் மாவட்டத்தில் கரியக்கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் ஆகிய அணைகளும் கல்வராயன் மலையின் மூலம் நீராதாரம் பெறுகின்றன.
கல்வராயன் மலை உழவுநாடு, உப்புநாடு, மதுநாடு, கண்டப்பநாடு, தென்மலைநாடு, கடியநாடு, ஆதிபத்திநாடு என பல நாடுகளாக பிரிக்கப்பட்டு அரியக்கவுண்டன், குறும்பக்கவுண்டன், சடையக்கவுண்டன் என 3 ஜாகீர்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது கொடுவாள்வரி, குடிவரி, வீட்டுவரி, வெள்ளாடுவரி, கால்நடைவரி, புனல்காடுவரி, புல்வரி, கூட்டுவரி, நாட்டுவரி, ஏர்வரி, திருமணவரி, காவாலிவரி போன்று பல்வேறு வரிகளை ஜாகீர்தார்கள் கல்வராயன் மலை பகுதி மக்களிடம் வசூலித்துள்ளனர். சுதந்திரத்திற்கு பின் 1976 ம் ஆண்டு தான் கல்வராயன் மலை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை கல்வராயன் மலை பகுதி மக்கள் விவசாயம், கால்நடை பராமறிப்பு, கடுக்காய், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களையே தங்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர்.
கல்வராயன் மலையில் மானாவாரி முறையில் சாமை, வரகு, தினை, மரவள்ளி, மக்காசோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக இங்கு பருவ மழை துவங்கும் காலங்களில் மரவள்ளியை விவசாயிகள் நடவு செய்கின்றனர். 10 மாதங்களுக்கு பிறகு அதனை அறுவடை செய்கின்றனர். ஆண்டுக்கு 1 முறை மட்டுமே அறுவடை செய்தால் போதிய வருமானம் இன்றி வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள விவசாயிகள் வெகு சிலர் மட்டும் விவசாய நிலத்தில் சிறிய அளவில் கிணறு அமைத்து அதில் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் இரைத்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறி பயிர்களும், சாமந்தி, சம்பங்கி போன்ற பூ வகைகளையும் சாகுபடி செய்கின்றனர். ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் நிலம் அமைந்துள்ள விவசாயிகள் நீர் நிலைகளில் பம்ப் செட் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
கல்வராயன் மலையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக இங்கு தோட்ட பயிர்களான மிளகு, காப்பி, அண்ணாசி பழம் போன்ற பல்வேறு பண பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இதனால் தோட்டக்கலை துறை சார்பில் சோதனை அடிப்படையில் கல்வராயன் மலையில் சில இடங்களில் விவசாயிகள் மிளகு, காப்பி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் வசதி மற்றும் கிணறு உள்ள விவசாயிகள் மட்டுமே மிளகு செடிகளை நடவு செய்து அதன் மூலம் வருமானமும் பெற்று வருகின்றனர்.
கல்வராயன் மலையில் 90 சதவீத விவசாயிகள் இன்றளவும் மானாவாரி முறையில் மரவள்ளியை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் கிணறு அமைக்க அதிக பொருட்செலவு ஏற்படுவதாலும் போதிய வருமானம் இல்லாததாலும் கிணறு அமைக்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறைந்த செலவில் போர்வெல் அமைக்க விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கல்வராயன் மலையில் போர்வெல் அமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததால் மிளகு மற்றும் காப்பி செடிகளை சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளும், வேறு வழியின்றி மானாவாரி பயிர்களையே சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கல்வராயன் மலையில் உள்ள விவசாயிகளுக்கு போர் வெல் அமைக்கவும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் கல்வராயன்மலையிலும் காப்பி, மிளகு, அண்ணாசி போன்ற பல்வேறு பயிர்களை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து தங்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

