/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்வது... கட்டுப்படுத்தப்படுமா?: விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம்
/
விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்வது... கட்டுப்படுத்தப்படுமா?: விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம்
விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்வது... கட்டுப்படுத்தப்படுமா?: விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம்
விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்வது... கட்டுப்படுத்தப்படுமா?: விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம்
ADDED : அக் 09, 2025 02:19 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் அமைப்பதை கண்காணித்து, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தில் பட்டாசு கடைகள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட நகரங்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
இதன் காரணமாக கிராமங்களில் இருந்து பொருட்களை வாங்க நகருக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இட நெருக்கடியான மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் திறக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் அச்சுறுத்தலாக உள்ளன. பட்டாசு கடையில் மின் விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றின் கீழ் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது. ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும்.
உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைக்க தீயணைப்புத் துறையின் தடை இல்லா சான்று வழங்கப்படும்.
இதை மீறி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறும் கடைக்காரர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிலர் ஒரே உரிமத்தைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளைத் திறந்து பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பட்டாசு விற்பனை செய்கின்றனர்.
இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விடுவதால் பெரும் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. கிராமங்களில் பெட்டிக்கடைகளில் கூட பட்டாசு விற்பனை செய்வது சகஜமாக நடக்கிறது.
கடந்த 2016 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டேஷனரி கடை மாடியில் விதிகளை மீறி பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. கடந்த 2021 ம் ஆண்டு சங்கராபுரம் நகரின் மையப்பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பட்டாசு கடைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காததும், இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுமே காரணம்.
மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்வதால் சிறு விபத்து ஏற்பட்டாலும் அது பெரிய இழப்புகளுக்கு காரணமாகி விடுகிறது.
இதனைத் தவிர்க்க பட்டாசு கடைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் பாரபட்சம் இன்றி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் நெரிசலான பகுதியில் பட்டாசு கடைகள் அமைப்பதை தடை செய்து ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமான ஒரு இடத்தில் பட்டாசு கடைகள் திறக்க அனுமதித்தால் விபத்துக்களால் பெரும் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தும் அதிகாரிகள், பட்டாசு கடை விற்பனையில் விதிமுறைகளை கடைபிடிக்க கண்டிப்புடன் கண்காணித்தால் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக அமையும்.
- நமது நிருபர் -