/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்கள் முறைப்படுத்தப்படுமா?: வருவாயை பெருக்க நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்கள் முறைப்படுத்தப்படுமா?: வருவாயை பெருக்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்கள் முறைப்படுத்தப்படுமா?: வருவாயை பெருக்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்கள் முறைப்படுத்தப்படுமா?: வருவாயை பெருக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 05, 2025 11:13 PM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள கோவில்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு முறைப்படுத்தி, வருவாயை பெருக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சிறப்பு வாய்ந்த கோவில்கள் ஏராளமாக உள்ளன. இக்கோவில்களில் தினசரி பூஜை, பராமரிப்பு, திருவிழா நடத்துவது உள்ளிட்ட செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துகள் கோவில் பெயரில் உள்ளன.
ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர கோவிலுக்கு சொந்தமான பெரும்பாலான சொத்துகள் பலவும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி கணக்குகள் எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.
கோவில் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாது என்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் கோவிலுக்கு எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்தாமல், அதனை வெளியாட்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டு ஆதாயமடைந்து வருகின்றனர்.
இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமலும் உள்ளனர். இதனால், கோவில்களின் அன்றாட பூஜை, புனஸ்காரங்கள் முழுமையாக செய்ய முடியாமல் தனி நபர்களின் கையை எதிர்பார்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு 8 ஏக்கர், பெருமாள் கோவிலுக்கு 38, முப்பியம்மன் கோவிலுக்கு 3 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. இதன் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய்கும் மேல் ஆகும். ஆனால் இவைகளிலிருந்து கோவில்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு தொகையும் செலவிடப்படுவது இல்லை.
அதேபோல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு 170 ஏக்கர், திருவரங்கம் ரங்கநாதர் 130, கல்வராயன்மலை சின்னதிருப்பதி 60, ராவுத்தநல்லுார் சஞ்சீவிராயர் 60, பரிக்கல் லட்சுமிநரசிம்மர் 60, வீரசோழபுரம் அர்த்தநாரிஸ்வரர் 42, உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் 40, வரஞ்சரம் பசுபதீஸ்வரர் 40, சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர் 36, திருநாவலுார் கிருபாபுரீஸ்வரர் 35 என 70க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பெரிய கோவில்களுக்கு சொந்தமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிறு கோவில்களுக்கு 500 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 270 கோவில்களுக்கு சொந்தமானதாக 1,000 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் இருந்தும், அதிகாரிகளின் முறையான கணக்கீடு இல்லாததால், மொத்தமாக 25 லட்சம் ரூபாய் மட்டுமே மாத வருவாயாக கிடைத்து வருகிறது.
ஆண்டு ஒன்றுக்கு 3 கோடி வரை வருவாய் கிடைத்தாலும், இந்த தொகை முழுதும் கோவில் பராமரிப்புக்காக வழங்கப்படாமல், துறை சார்ந்த பணியாளர்களின் மாத ஊதியம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக மட்டுமே செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் முழுதையும் முறையாக கணக்கிட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்டு, கோவில்களை சிறப்பாக பராமரிக்கவும், திருவிழாக்கள், பூஜைகளை முறையாக நடத்துவதற்கும் தேவையான வருவாயை ஈட்டும் வகையில் அந்த நிலங்களை பராமரித்து வருவாய் மேம்படுத்திட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.