/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி, குளங்களின் கரைகள் சீரமைக்கப்படுமா? முன்னெச்சரிக்கை அவசியம்
/
ஏரி, குளங்களின் கரைகள் சீரமைக்கப்படுமா? முன்னெச்சரிக்கை அவசியம்
ஏரி, குளங்களின் கரைகள் சீரமைக்கப்படுமா? முன்னெச்சரிக்கை அவசியம்
ஏரி, குளங்களின் கரைகள் சீரமைக்கப்படுமா? முன்னெச்சரிக்கை அவசியம்
ADDED : ஜூன் 02, 2025 11:05 PM

கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆற்றின் குறுக்கே கச்சிராயபாளையம் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. அதேபோல் மணி மற்றும் முக்தா ஆகிய இரு ஆறுகளும் இணையும் சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இவ்விரு அணைகளும் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல் மாவட்டத்தில் 593 ஏரிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன.
ஏரிகளைப் பொறுத்தவரை அவைகளின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் வரத்து வாய்க்கால் ஆகியவை பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பருவ மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் ஏரியில் முழுமையாக நிரம்புவதில்லை.
மழையினால் கிடைக்கும் நீர் விரயமாகி கடலுக்கு செல்வதால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயத்தை ஜீவாதாரமாகக் கொண்ட மாவட்டத்தில் நீர்வளம் குறையாமல் பாதுகாத்தால் மட்டுமே பயிர் சாகுபடி குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
வழக்கமாக இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 40 சதவீதம், வடகிழக்கு பருவமழை காலத்தில் 60 சதவீதம் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். சில ஆண்டுகள் பருவ மழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றும் தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கன மழை பெய்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்துள்ளது.
இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் 30 அடி தண்ணீர் உள்ளது. மணிமுக்தா அணையில் 36 அடியில் 31 அடி வரை நீர் இருப்பு உள்ளது. அதேபோல் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் 50 முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை ஒரு வாரம் முன்னதாகவே துவங்கிவிட்டபோதிலும் இனிதான் தீவிரமடையும்.
தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவமழை முடியும் காலத்தில் அணை மற்றும் ஏரிகளில் கிடைத்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவைவிட அதிகமாகவே நீர் இருப்பு உள்ளது.
இதனால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழியும் சூழல் ஏற்படும்.
இதன் காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஏரிகளின் கரைகளை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளது அவசியமாகும்.
நீர்நிலைகளின் கரைகளை செப்பனிட்டு வரத்து வாய்க்கால் மற்றும் ஏரிகள் நிரம்பும் போது தண்ணீர் வெளியே செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புனரமைக்க வேண்டும்.
இந்த ஆண்டு வழக்கமான அளவைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.