/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் மலைப்பாதை செப்பனிடப்படுமா?
/
தியாகதுருகம் மலைப்பாதை செப்பனிடப்படுமா?
ADDED : செப் 29, 2024 06:36 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் மலை மீது புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அன்று நடைபெறும் திருத்தளிகை வழிபாட்டிற்கு மலைப்பாதையை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலை அமைந்துள்ளது. இதன் மீது திப்புசுல்தான் காலத்திய கோட்டை இடிபாடுகளும் 3 பிரமாண்ட பீரங்கிகளும் உள்ளன. இம்மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையில் மலை உச்சியில் சீனிவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடத்துவது வழக்கம். கீழிருந்து உற்சவர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
மலை உச்சிக்கு செல்ல பாதி உயரத்திற்கு மட்டுமே படிகள் உள்ளன. அவைகளும் பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து மேலே செல்ல மிகுந்த ஆபத்தான பாதையாக உள்ளது.
அதேபோல் படி இல்லாத இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் பாதையின் குறுக்கே கிடைக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் மலை மீது சென்று பெருமாளுக்கு வழிபாடு நடத்துகின்றனர். குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் அதிகளவில் பூஜையில் பங்கேற்கின்றனர்.
இதன் காரணமாக மலை மீது செல்லும் வழியில் வளர்ந்திருக்கும் முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தி பாதையில் கிடக்கும் கற்களை அகற்றி பக்தர்கள் சிரமமின்றி மேலே செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும்.
இப்பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் திருத்தளிகை வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மலை பாதையை செப்பனிட்டு கொடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.