/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் கால்நடை சந்தை வேறு இடத்திற்கு... மாற்றப்படுமா?: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு
/
தியாகதுருகம் கால்நடை சந்தை வேறு இடத்திற்கு... மாற்றப்படுமா?: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு
தியாகதுருகம் கால்நடை சந்தை வேறு இடத்திற்கு... மாற்றப்படுமா?: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு
தியாகதுருகம் கால்நடை சந்தை வேறு இடத்திற்கு... மாற்றப்படுமா?: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 18, 2025 05:55 AM

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கால்நடை விற்பனை சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தியாகதுருகம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள இடத்தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் செயல்படுகிறது.
அதை ஒட்டியுள்ள பிரதிவி மங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான மேல் பூண்டி தக்கா ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கால்நடை விற்பனை நடக்கிறது.
இப்பகுதியை ஒட்டி சந்தை மேடு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் கால்நடை சந்தை நடக்கும் பகுதியி ல் ஏரி நீர் தேங்கி நிற்கும். இருப்பினும் நீர் தேங்கியுள்ள இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஆடு மாடுகளை நிறுத்தி விற்பனை செய்கின்றனர்.
சந்தையில் கால்நடைகள் வெளியேற்றும் கழிவுகள் ஏரி நீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமின்றி இப்பகுதி சேறும் சகதியுமாக மாறியதால் இதை ஒட்டி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைத்த வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக மக்கள் இப்பகுதிக்கு வருவதைத் தவிர்த்து சாலையோர கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். பஸ் நிலையத்தை ஒட்டி வார சந்தை வளாகம் அமைந்துள்ளதால் வெளியூரிலிருந்து வரும் மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி சொல்ல வசதியாக உள்ளது.
ஆனால் இதை ஒட்டி நடைபெறும் கால்நடை சந்தை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதோடு போக்குவரத்து பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. சில கடைக்காரர்கள் காய்கறி கழிவுகளையும் ஏரி நீரில் கொட்டுவதால் இப்பகுதியே சாக்கடை போல் காட்சியளிக்கிறது.
இட நெருக்கடி மிகுந்த இவ்விடத்திலிருந்து கால்நடை சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தியாகதுருகம் பேரூராட்சி மற்றும் பிரதிவிமங்கலம் ஊராட்சி எல்லை நடுவில் வார சந்தை நடைபெறுவதால் கால்நடை விற்பனையை பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம், பெரியமாம்பட்டு, உதய மாம்பட்டு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அப்போதுதான் சந்தை வரி வசூல் வருவாய் முழுவதும் தியாகதுருகம் பேரூராட்சிக்கு கிடைக்கும். வார சந்தை நடக்கும் இடத்திற்கு அருகில் கால்நடை சந்தையை மாற்ற வேண்டுமெனில் அது பிரதிவிமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் சென்று விடும்.
தற்போதைய நிலையில் வார சந்தையின் ஒரு பகுதி பிரிதிவிமங்கலம் எல்லைக்குள் நடப்பதால் அதன் வருவாய் தங்கள் ஊராட்சிக்கு கிடைப்பதில்லை என இவ்வூர் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்விரு ஊர்களுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினையால் கால்நடை சந்தையை எங்கே மாற்றுவது என்று சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதன் காரணமாக வார சந்தை வளாகம் நாளுக்கு நாள் தொற்று நோய் பரப்பும் மையமாக மாறி வருவது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. உடனடியாக கால்நடை விற்பனை செய்யும் இடத்தை தண்ணீர் தேங்காத மேடான இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

