/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
/
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஆக 10, 2025 11:41 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1 அடி முதல் 3 அடி வரையிலான களி மண்ணால் செய்யும் விநாயகர் சிலைகள் த யாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ரூ.100 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்கின்றனர்.
அதுபோல், பேப்பர் அட்டை, கிழங்கு மாவு கலந்த கலவையால் 4 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள், கள்ளக்குறிச்சி அடுத்த கடத்துார், நீலமங்கலம் கூட்ரோடு, தச்சூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு சிங்கம், மான், ஆஞ்சநேயர், மயில், மூஞ்சூறு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்தவாறு புதிய வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரியணையில் முண்டாசு கட்டி அமர்ந்தபடியும், ஆஞ்சநேயர், நரசிம்மன், விநாயகர் ஆகிய மூன்று தலைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இவை, ரூ.2,000 முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆர்டர் செய்து விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.