/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி
ADDED : அக் 30, 2025 06:57 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே திருமணமான மூன்று மாதமே ஆன இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 27; மனைவி சரோஜினி, 23; இவர்களுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கதிர்வேல் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சரோஜினி தீபாவளி பண்டிகைக்காக செட்டிதாங்களில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 24ம் தேதி தாலி பிரித்து கோர்த்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கால்நடைக்கு தீவனப்புல் அறுப்பதற்காக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிச்சென்ற போது வழியில் இருந்த ஆணையன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் ஓரம் புல் புதர் சரிந்து இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு மீட்பு குழுவினர் 70 அடி ஆழக்கிணற்றில் இறங்கி சரோஜினி உடலை மீட்டனர். சரோஜினி தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

