/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடு கட்டும் பயனாளிகள் சிமென்ட், கம்பி எடுக்க... நிர்பந்தம் பிடித்தம் தொகை அதிகமாக உள்ளதாக புலம்பல்
/
வீடு கட்டும் பயனாளிகள் சிமென்ட், கம்பி எடுக்க... நிர்பந்தம் பிடித்தம் தொகை அதிகமாக உள்ளதாக புலம்பல்
வீடு கட்டும் பயனாளிகள் சிமென்ட், கம்பி எடுக்க... நிர்பந்தம் பிடித்தம் தொகை அதிகமாக உள்ளதாக புலம்பல்
வீடு கட்டும் பயனாளிகள் சிமென்ட், கம்பி எடுக்க... நிர்பந்தம் பிடித்தம் தொகை அதிகமாக உள்ளதாக புலம்பல்
ADDED : மார் 02, 2025 12:31 AM
காஞ்சிபுரம், அரசு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள், சிமென்ட் மூட்டை, கம்பி ஆகிய பொருட்களை கட்டாயமாக எடுக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் நிர்பந்தித்து வருகின்றனர். பிடித்தம் செய்யும் தொகையும் அதிகமாக உள்ளதாக வீடு கட்டுவோர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு பிரதமர் வீடு வழங்கும் திட்டம், விளிம்பு நிலையில் தள்ளப்பட்டுள்ள பழங்குடியினத்தவர்களுக்கு வீடுகள் மற்றும் மாநில அரசு கலைஞர் கனவு இல்லம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டு
அதன்படி, 2024- -- 25ம் நிதி ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,855 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள்; பிரதமர் குடியிருப்பு திட்டத்தில், 584 பயனாளிகளுக்கு வீடுகள் மற்றும், 2023 - -24ம் நிதி ஆண்டில் விளிம்பு நிலையில் தள்ளப்பட்டுள்ள பழங்குடியினத்தவர்களுக்கு 368 வீடுகள் என மொத்தம், 3,087 வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசு வீடுகளுக்கு, 104 சிமென்ட் மூட்டைகள், 320 கிலோ கம்பி மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்ட மாநில அரசு வீடுளுக்கு, 140 மூட்டை சிமென்ட், 320 கிலோ கம்பி ஆகிய கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
அரசு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளின் சுமை குறைக்கும் பொருட்டு, 216 ரூபாய்க்கு குறைந்த விலையில், அ.தி.மு.க., ஆட்சியில், 'அம்மா சிமென்ட்' என்கிற பெயரில் சிமென்ட உற்பத்தி செய்து, வீடு கட்டும் பயனாளிளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஓராண்டிற்கு முன் மானிய விலை சிமென்ட் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தேர்வாகி இருக்கும் பயனாளிகளுக்கு சிமென்ட், கம்பி ஆகிய பொருட்களை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் நிர்பந்திப்பதாக பயனாளிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதவிர, ஒரு மூட்டை சிமென்ட் 285 ரூபாய்க்கும், 58 ரூபாய்க்கு ஒரு கிலோ கம்பியும் வழங்கப்படுகிறது. அதன்படி, கலைஞர் கனவு இல்லம், பழங்குடியினத்தினரின் வீடுகளுக்கு, 140 மூட்டைகள் சிமென்ட்டிற்கும், 39,900 ரூபாயும், 320 கிலோ கம்பிக்கு, 18,560 ரூபாய் என மொத்தம் 58,460 ரூபாய்.
அதேபோல், மத்திய அரசின் பிரதமர் வீடுகளுக்கு, 104 மூட்டை சிமென்ட்டிற்கு, 29,640 ரூபாய் மற்றும், 320 கிலோ கம்பிக்கு, 18,560 ரூபாய் என, மொத்தம் 48,200 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
இது, தனியார் கட்டுமானப் பொருட்கள் வாங்கும் கடை விலையை காட்டிலும் கூடுதலாக இருக்கிறது உள்ளது என புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு குறைந்த தொகையே அரசு வழங்குகிறது.
இதில், கம்பி, சிமென்ட் ஆகிய பொருட்களுக்கு பிடித்தம் போக சொற்பமான பணமே எங்களுக்கு கிடைக்கிறது. பொருட்களும் தரமில்லாமலும், விலையும் கூடுதலாக இருப்பதால், வீடு கட்டுவோருக்கு இரட்டிப்பு செலவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
தரம் குறித்து தெரியாது
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசு வீடு கட்ட தேர்வு செய்த பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிமென்ட் மூட்டைகள், கம்பி இறக்குமதி செய்து வினியோகம் செய்ய அறிவுரை வழங்கப்படுகிறது.
இந்த பொருட்களை, அரசு திட்ட பயனாளிகளை தவிர்த்து, வேறு யாருக்கும் வழங்க முடியாது. அகையால் தான் பயனாளிகளை கட்டாயமாக எடுத்து செல்ல வேண்டும் என்கிறோம்.
தரம், விலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.