/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள்...முடக்கம் வீடு கட்டும் திட்டத்தில் கவனம் செலுத்த உத்தரவு
/
ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள்...முடக்கம் வீடு கட்டும் திட்டத்தில் கவனம் செலுத்த உத்தரவு
ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள்...முடக்கம் வீடு கட்டும் திட்டத்தில் கவனம் செலுத்த உத்தரவு
ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள்...முடக்கம் வீடு கட்டும் திட்டத்தில் கவனம் செலுத்த உத்தரவு
ADDED : மார் 03, 2025 12:18 AM
காஞ்சிபுரம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம் வெட்டும் பணி, மேய்க்கால் நில மேம்பாடு உள்ளிட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதால், எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி தலைவர்கள் புலம்புகின்றனர். இந்த திட்ட பணியாளர்கள் அனைவரும், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மட்டும் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில், 1.37 லட்சம் குடும்பங்களில், 1.68 லட்சம் பேர், இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.29 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில் 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 40,918 பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன.
கடந்த 12 வாரங்களுக்குரிய கூலி தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. மேலும், 2025- -- 26ம் நிதி ஆண்டிற்குரிய, 'லேபர் பட்ஜெட்' இன்னும் போடப்படவில்லை.
ஏற்கனவே தேர்வு செய்த குளம் வெட்டும் பணி, மேய்க்கால் நிலம் மேம்பாடு பணி உள்ளிட்ட பல விதமான பணிகள் செய்வதற்கு, 100 நாள் பணியாளர்கள் வர வேண்டாம்.
அதற்கு பதிலாக, அரசு வீடு வழங்கும் திட்டத்தில் இருக்கும் பயனாளிகளுக்கு வருகை பதிவேடு பதிவு செய்யுங்கள் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் பேசி, ஆடியோ அனுப்பி உள்ளார்.
முடங்கும் அபாயம்
இதனால், 100 நாள் திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும் பணி மற்றும் வட கிழக்கு பருவ மழைக்கு பின் செய்து கொள்ளலாம் என, ஒதுக்கி வைக்கப்பட்ட குளம் மேம்பாடு பணி முடங்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, 81.90 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 680 குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் இறுதி வரையில், 178 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம், 508 பணிகள் நடந்து வருகின்றன. இவை தவிர, 57 மேய்க்கால் நில மேம்பாடு பணிகளும் முடக்கப்பட்டு உள்ளன.
இவை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆடியோவால், ஊராட்சி சாலையோரம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மற்றும் புதிய குளம் வெட்டும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த முடியாமல் முடங்கியுள்ளது.
மேலும், கோடைக்காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி கிராமப்புற பெண்கள் பரிதவிக்கும் சூழல் நிலவி வருகிறது.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
அடுத்த நிதி ஆண்டு
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே பணி செய்த பெரும்பாலான தொழிலாளர்கள், 50 நாட்களுக்கு மேல் வருகை பதிவு செய்து, கூலி பெற்றிருப்பர்.
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோர் குறைந்த எண்ணிக்கையில் பதிவு செய்திருப்பர் என, ஆடியோ போட்டிருப்பர். வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை. நிலுவை பணிகளை அடுத்த நிதி ஆண்டில் தொடர்ந்து செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.