/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அணைக்கட்டு தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்; பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளாகியும் வேடிக்கை
/
அணைக்கட்டு தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்; பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளாகியும் வேடிக்கை
அணைக்கட்டு தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்; பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளாகியும் வேடிக்கை
அணைக்கட்டு தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்; பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளாகியும் வேடிக்கை
UPDATED : ஆக 21, 2024 05:49 AM
ADDED : ஆக 20, 2024 11:32 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது வரதராஜபுரம் ஊராட்சி. இதன் அருகே நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது அணைகட்டுதாங்கல் ஏரி. இந்த ஏரி, அடையாற்றின் கரையோரம் அமைந்திருப்பதால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சில ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.
ஆனால், ஏரியின் சில பகுதிகள் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு ஆளாகி, ஏரியின் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், ஏரியின் முழு பரப்பளவான, 133 ஏக்கரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது.
இதனால், ஏரி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டு, ஏரி முழுதும் நாசமாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே இந்த பகுதி அமைந்துள்ளதால், ஏராளமானோர் அணைக்கட்டுதாங்கல் ஏரிக்குள் ஆக்கிரமித்து குடியேறியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக உருவான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியாமல், இன்று வரை வருவாய் துறையும், நீர்வளத் துறையும் திணறி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2015ல் பெய்த பெருவெள்ளத்தின்போது, மாவட்டத்திலேயே அதிக வெள்ள பாதிப்பு, வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டிலும், வரதராஜபுரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இங்கு அதிக பாதிப்பு ஏற்படுவதால், கடந்த 10 ஆண்டுகளாகவே, வரதராஜபுரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், அய்யப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு மட்டும், 500 கோடி ரூபாய்க்கு மேலாக தமிழக அரசு செலவிடப்பட்ட நிலையில், அடையாற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டுதாங்கல் ஏரியில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற முடியாமல் உள்ளது.
பெருவெள்ளம் ஏற்பட்டதில் இருந்து, அடையாற்றின் கரைகள் பலப்படுத்துவது, அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொள்ளும் நிலையில், இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முனைப்பு காட்டியதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது, ஏரிக்குள் கட்டியிருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் அங்கு வசிப்பவர்களை மீட்பதும் தொடர்கிறது.
ஆனால், ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, அணைக்கட்டு தாங்கல் ஏரியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஏதுமின்றி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏரியை தாரைவார்த்தது போலாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடையாற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல், அணைக்கட்டு கட்டுவது, மூடுகால்வாய் அமைப்பது, சிறுபாலம் கட்டுவது போன்ற வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.