/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
653 இடத்தில் புது சாலைகள் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
/
653 இடத்தில் புது சாலைகள் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
ADDED : மார் 25, 2024 11:54 PM
சென்னை : சென்னை பெருநகரில், 653 இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், கடந்த 2008ல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் சென்னை புறவழிச் சாலை, சென்னை வெளிவட்ட சாலை ஆகிய வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு, பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த புதிய வழித்தடங்களை ஒட்டிய கிராமங்களின் உள்ளூர் சாலைகளில் எவ்வித மேம்பாடும் இல்லாதது, குறையாக காணப்பட்டது.
இதை கருத்தில் வைத்து, உள்ளூர் சாலைகளை பிரதான சாலைகளுடன் இணைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்புடன், சென்னை பெருநகர் சாலை வலைப்பின்னல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் முதல் கட்டமாக, 422 சாலைகளை பிரதான சாலைகளுக்கு இணையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக, புதிய சாலைகள் அமைக்க, சி.எம்.டி.ஏ., முன்வந்துள்ளது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை பெருநகரில் அதிக போக்குவரத்து உள்ள பிரதான சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. இத்துடன், உள்ளூர் சாலைகளும் அகலப்படுத்தப்படுகின்றன.
இதில், பல இடங்களில் உள்ளூர் சாலைகளும், பிரதான சாலைகளும் தனித்தனியாக காணப்படுகின்றன. இவற்றுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசிய மாகிறது.
இதற்காக, 653 இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து வருகிறோம். அரசின் ஒப்புதல் பெற்றவுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

