/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி
ADDED : ஜூலை 04, 2024 12:14 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தில், 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளால், இந்த சாலையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழியாக சென்று வந்த வாகனங்கள், நெமிலி வழியாக மண்ணுார், காட்டு கூட்டுச்சாலை சென்று, அங்கிருந்து திருவள்ளூர் சென்று வருகின்றன.
இந்த நிலையில், நெமிலி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராசுவின் மகள் நிஷா, 8, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
சின்னராசு, மூன்று சக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், சின்னராசு, மகளுடன் நேற்று முன்தினம் இரவு, நெமிலி சாலையோரம் மூன்று சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்துக் கொண்டிருந்தார்.
மூன்று சக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்த நிஷா, வாகனத்தின் மேலிருந்து சாலையில் தவறி விழுந்தார்.
அப்போது, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி, நிஷா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியால் தான், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.