ADDED : ஜூன் 30, 2024 11:30 PM
வாலாஜாபாத்: ஊத்துக்காடு கிராமத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 48; கூலி தொழிலாளி. மனைவியை இழந்த இவருக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார்.
நேற்று காலை, ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலுக்கு வந்த முருகன், அங்குள்ள குளத்தில் குளிக்க இறங்கி உள்ளார்.
குளத்து தண்ணீரில் மூழ்கி வெகு நேரமாகியும் வெளியே வராததால், அங்கே இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
குளத்தில் இறங்கி பலர் தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி படகு மூலம் முருகனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை முருகன் கிடைக்கவில்லை.