/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஏடிஸ்' கொசு பரவலால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாதந்தோறும் சராசரியாக 20 பேருக்கு 'பாசிட்டிவ்'
/
'ஏடிஸ்' கொசு பரவலால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாதந்தோறும் சராசரியாக 20 பேருக்கு 'பாசிட்டிவ்'
'ஏடிஸ்' கொசு பரவலால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாதந்தோறும் சராசரியாக 20 பேருக்கு 'பாசிட்டிவ்'
'ஏடிஸ்' கொசு பரவலால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாதந்தோறும் சராசரியாக 20 பேருக்கு 'பாசிட்டிவ்'
ADDED : ஆக 07, 2024 10:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'ஏடிஸ்' கொசு உற்பத்தி காரணமாக, டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் 80 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், மாதந்தோறும் சராசரியாக 20 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
தென்மேற்கு பருவமழை இரு மாதங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை பெய்து, வீடுகளின் அருகில் மழைநீர் தேங்கி அதில் கொசு உற்பத்தி அதிகமாகி வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை உருவாக்கும், 'ஏடிஸ்' கொசுவை உற்பத்தி செய்யும் காலநிலை, தட்பவெப்பம் இப்போது சாதகமாக இருப்பதால், ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாதமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்ததன் விளைவாக, டெங்கு காய்ச்சலும் சற்று அதிகரித்து வருகிறது.
மாவட்டம் முழுதும், அரசு, தனியார் மருத்துவமனைகளில், 80 நோயாளிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 20 பேர், சராசரியாக டெங்குவால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
கடந்த ஏப்ரல், மே ஆகிய கோடை காலங்களை காட்டிலும், 10 சதவீத பாதிப்பு இப்போது அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் பற்றி போதிய விழிப்புணர்வு இன்றி, உரிய சிகிச்சை எடுக்காவிட்டால், உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடும் என, சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.
இதனால், தொடர் காய்ச்சல், உடல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என, சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க, மாவட்டம் முழுதும் 300க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியை கண்டறிந்து அவற்றை அகற்றுகின்றனர். வீட்டில் தண்ணீர் எங்காவது தேங்கியிருக்கிறதா எனவும் ஆய்வு செய்து, அவற்றை அகற்ற வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் இல்லை.
ஒவ்வொரு ஊராட்சியும் தனியாக ஒரு இயந்திரத்தை வாங்கி வைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். அருகில் உள்ள ஊராட்சிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் எதிர்பார்க்கின்றனர். கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை, ஊராட்சி நிர்வாகங்கள் வாங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாதந்தோறும் சராசரியாக 20 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக 80- - 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 28 ஆரம்ப சுகாதார மையங்கள் வாயிலாக, டெங்கு பாதிப்பு யாருக்காவது கண்டறியப்பட்டால், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில், மருத்துவ முகாம் அமைத்து, ரத்த பரிசோதனை செய்கிறோம்.
வீடுகளில் ஆய்வு செய்து தண்ணீர் தேங்கியிருக்கிறதா என பார்க்கிறோம். சிலர் வெளியூரில் தங்கி பாதிப்பு ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வந்திருப்பர். அதுபோன்ற நபர்களிடம் விசாரித்து, அவர் புறப்பட்டு வந்த ஊரில் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிப்போம்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலேயே, நோயாளிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.