/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை அமைப்பு
/
பழையசீவரம் பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை அமைப்பு
ADDED : மே 06, 2024 03:35 AM

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், பழையசீவரம் உள்ளது.
பழையசீவரம் மற்றும்திருமுக்கூடல் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருமுக்கூடல் பாலாற்று பாலத்தை கடந்து பழையசீவரம்மலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை முதல், இரவு 10:00 மணி வரை பயணியர் கூட்டம் எப்போதும் இருக்கும்.
இப்பேருந்து நிறுத்தத்தில் ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடை,சாலை விரிவாக்க பணியின் போது இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, அப்பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதியின்றி பயணியர் சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் வெயில் நேரங்களில் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் தொடர்ச்சியாக அப்பகுதி ஊராட்சி தலைவர் நீலமேகன் மேற்கொண்ட நடவடிக்கையால், அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் தென்னங்கீற்றிலான தற்காலிக நிழற்குடை நேற்று அமைக்கப்பட்டது.