/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் பாதிப்பது அதிகரிப்பு! வீடுதோறும் மருந்து, மாத்திரை வழங்க முடிவு
/
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் பாதிப்பது அதிகரிப்பு! வீடுதோறும் மருந்து, மாத்திரை வழங்க முடிவு
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் பாதிப்பது அதிகரிப்பு! வீடுதோறும் மருந்து, மாத்திரை வழங்க முடிவு
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் பாதிப்பது அதிகரிப்பு! வீடுதோறும் மருந்து, மாத்திரை வழங்க முடிவு
ADDED : ஜூலை 02, 2024 03:20 AM
சென்னை : வயிற்றுப்போக்கு காரணமாக, சென்னையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மாநகராட்சி முழுதும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5.25 லட்சம் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல், ஜிங்க் மாத்திரைகளை வீடு, வீடாக மாநகராட்சி வழங்க உள்ளது.
அத்துடன் கண்பார்வை இழப்பை தடுக்கும் வகையில் 'வைட்டமின் ஏ' மருந்து கரைசல், 4.8 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை அபித் காலனி பகுதியில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவரது, 11 வயது மகன் யுவராஜ், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தான்.
சிறுவன் தங்கியிருந்த பகுதியில், 10 நாட்களுக்கும் மேலாக, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் வழங்கப்பட்ட நீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனால் தான் சிறுவன் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.
உடனடியாக, அப்பகுதியில் எடுக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், வாரியம் வழங்கிய குடிநீரால் சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், சென்னையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், குடிநீரில் கழிவுநீர் கலந்து நீர் மாசுப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதியில், குடிநீர் தரத்தை உறுதி செய்யவும், கழிவுநீர் கசிவு ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இந்நிலையில், வயிற்றுப்போக்கு காரணமாக சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், குழந்தைகள் சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது.
அதனால், குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கும் வயிற்றுப்போக்கு பாதிப்பை குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 5 வயதுக்கு உட்பட்ட, 5.25 லட்சம் குழந்தைகளுக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், சென்னையில் வயிற்றுப்போக்கு பாதிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.
மற்றவர்களுக்கு பாதிப்பில்லை!
சைதாப்பேட்டை, அபித் காலனியில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு புகார் உள்ளது. வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தோம். காலையில் வரும் தண்ணீர் தெளிவாகவும், முடியும் தருவாயான 9:00 மணிக்கு மேல் கருமை நிறத்திலும் வருவதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர். இதற்கு குழாயில் படிந்திருக்கும் கசடுகள் காரணமாக இருக்கலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சென்னையில், 10 இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னை இருந்து வருகிறது. அபித் காலனியில், 625 குடியிருப்புகளில், 2,500 பேர் உள்ளனர். சிறுவன் உயிரிழப்புக்கு, வாரியம் வழங்கிய குடிநீர் காரணம் இல்லை. ஏனென்றால், வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. சிறுவனின் பிரேத பரிசோதனை ஓரிரு நாளில் வரும். அதன்பின், உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறுகின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தோர் சிகிச்சை பெற வேண்டும் என்றால், பணம் கட்டி தான் சிகிச்சை பெற முடியும். இந்தியா முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அந்தந்த மாவட்ட மக்களுக்கு தான் இலவச சேவை. மற்ற மாநிலத்தவர்கள் வந்தால், அவர்கள் பணம் கொடுத்து தான் சிகிச்சை பெற வேண்டும். அந்த நடைமுறையில் தான், சிறுமி சிகிச்சைக்கு, மருத்துவமனையில் 1,000 ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது. அவற்றை லஞ்சம் என, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன்,
அமைச்சர் மக்கள் நல்வாழ்வு துறை