sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சி.ஐ.டி.யு., போராட்டத்தால் தொடரும் சிக்கல்; காஞ்சி 'சாம்சங்' தொழிற்சாலை திணறல்

/

சி.ஐ.டி.யு., போராட்டத்தால் தொடரும் சிக்கல்; காஞ்சி 'சாம்சங்' தொழிற்சாலை திணறல்

சி.ஐ.டி.யு., போராட்டத்தால் தொடரும் சிக்கல்; காஞ்சி 'சாம்சங்' தொழிற்சாலை திணறல்

சி.ஐ.டி.யு., போராட்டத்தால் தொடரும் சிக்கல்; காஞ்சி 'சாம்சங்' தொழிற்சாலை திணறல்

2


ADDED : செப் 17, 2024 12:30 AM

Google News

ADDED : செப் 17, 2024 12:30 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள 'சாம்சங்' தொழிற்சாலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அமைக்க வலியுறுத்தி ஒரு வாரமாக நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால், சிக்கல் நீடிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு, 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில், இறங்கியுள்ளனர்.

ஆனாலும், இன்னொரு தரப்பை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், இதுவரை எந்த தொழிற்சங்கமும் துவக்கப்படவில்லை.

சம்பளம், வேலை நேர பிரச்னைகளை முன்வைத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் துவங்க, இங்கு தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒருங்கிணைந்தனர்.

ஆனால், சி.ஐ.டி.யு., உள்ளிட்ட கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் மறுத்தது.

பேச்சு தோல்வி


இதற்கு பதிலாக, நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் ஒரு குழு அமைப்பதற்கும், அதன்வாயிலாக தொழிலாளர்களின் குறைகள், கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், பேச்சு நடத்தவும் நிர்வாகம் முன் வந்தது.

'சாம்சங் நிறுவனம் அமைக்க விரும்பும் கமிட்டியில், நிர்வாகத்திற்கு ஆதரவானவர்களே இருப்பர்; அரசின் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டிற்கும் வரும் வகையில் சட்ட ரீதியான தொழிற்சங்கமாக இருக்காது' என, சி.ஐ.டி.யு., சங்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் என, பல்வேறு தரப்பினர் முன்னிலையில் பேச்சு நடந்தது.

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையில், பேச்சு தோல்வி அடைந்தது. மீண்டும் பேச்சு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பிரச்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தொழிற்சங்கம் துவக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., மாநில செயலர் முத்துக்குமார் தலைமையில், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பேரணி செல்ல முயன்றனர். சாம்சங் ஊழியர்கள், 1,500 பேரில் 110 பேர் இதில் பங்கேற்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தகவலறிந்த, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்திரராஜன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.

கலெக்டர் கலைச்செல்வியை சந்தித்து, கோரிக்கை மனுவையும் அளித்தார். கலெக்டருடன், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,சண்முகம் உடனிருந்தார்.

இதற்கிடையே, சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை வளாகத்தில், வேலைக்கு செல்ல வந்த ஊழியர்களை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வேலைக்கு வரும் தொழிலாளர்களை சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, தீவிர சோதனை நடத்தி அனுமதித்தனர்.

இதுகுறித்து, 'வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட விரும்பாத தொழிலாளர்களை, தொழிற்சாலைக்குள் செல்ல நாங்கள் தடுப்பதில்லை. அவ்வாறு தடுக்கவும் கூடாது' என, சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்திரராஜன் நேற்று தெரிவித்தார்.

தனி அறையில் அடைப்பு


அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை ஒன்றுமில்லாமல் செய்ய, தொழிலாளர்களை மிரட்டி, பணியிட மாற்றம் செய்து பல்வேறு தொல்லைகளை கொடுத்தனர்.

தொழிற்சாலை அமைக்க விரும்பும், 'இன்டர்னல் கமிட்டி'யில் சேர தொழிலாளர்களை வற்புறுத்தினர். சேர மறுத்தவர்களை தனி அறையில் அடைத்து வைத்தனர்.

காஞ்சிபுரம் காவல்துறையின் அணுகுமுறை சரியில்லை. தொழிலாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக கூறுகின்றனர்.

கைது செய்த தொழிலாளர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர் என்பதற்கு பதில் இல்லை. இந்த நடவடிக்கை, தொழிலாளர்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துமே தவிர, மக்கள் ஆதரவை பெறாது.

கலெக்டரை சந்தித்தது போல, முதல்வரையும் சந்திப்போம். மற்ற தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுப்போம். இந்தியாவில் உள்ள 4,000 இணைப்பு சங்கங்கள் வாயிலாக, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், பிற தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவையும் கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் கேட்டபோது, 'போராட்டம் குறித்து நான் அதிகாரப்பூர்வமாக பேசக்கூடாது. தலைமை அலுவலக நிர்வாகிகள் பேசுவர்' என்றார்.






      Dinamalar
      Follow us