/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
274 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவக்கம் இந்தாண்டே 131 அமைக்க ஊரக வளர்ச்சி துறை முடிவு
/
274 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவக்கம் இந்தாண்டே 131 அமைக்க ஊரக வளர்ச்சி துறை முடிவு
274 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவக்கம் இந்தாண்டே 131 அமைக்க ஊரக வளர்ச்சி துறை முடிவு
274 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவக்கம் இந்தாண்டே 131 அமைக்க ஊரக வளர்ச்சி துறை முடிவு
ADDED : மே 07, 2024 11:27 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவற்றில், இந்தாண்டே 131 ஊராட்சிகளில் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையினர் துவங்கி உள்ளனர்.
அடுத்த, நிதி ஆண்டிற்குள் மீதியுள்ள 143 சிறிய சமுதாய சுகாதார வளாகங்களை கட்டி முடிக்க, ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிதோறும் மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
பெரும்பாலான ஊராட்சிகளில், மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்பாடு இன்றி, வீணாகி உள்ளன. ஒரு சில ஊராட்சிகளில், முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு பதிலாக, 274 ஊராட்சிகளிலும், சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டிக் கொடுப்பதற்கு, ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 131 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு, முதற்கட்டமாக, 4.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
குறிப்பாக, 2.10 லட்சம் ரூபாய் துாய்மை பாரத இயக்கத்திலும், 1.40 லட்சம் ரூபாய், 15வது நிதிக்குழு மானியத்திலும், அந்தந்த ஊராட்சிகளில் இருந்து நிதியை விடுவிக்க, ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அடுத்த நிதி ஆண்டில், எஞ்சியிருக்கும், 143 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சி துறையினர் உத்தேசித்து உள்ளனர்.
இதன் மூலமாக, திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுவதோடு, கிராம மக்களின் சுகாதாரமும் பேணி காக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4.58 கோடி ரூபாய் செலவில், 131 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள்கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால், ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
குறிப்பாக, சமுதாய சுகாதார வளாகத்தை பயன்படுத்துவோர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மூலமாக முறையாக பராமரிக்கப்படும். ஏற்கனவே இருந்த, சுகாதார வளாகங்களையும், ஊராட்சி நிர்வாகத்தை முறையாக பராமரிக்க அறிவுரை வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

