/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி ஆகஸ்ட் வரை 770 ஏக்கர் மட்டுமே விதைப்பு
/
காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி ஆகஸ்ட் வரை 770 ஏக்கர் மட்டுமே விதைப்பு
காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி ஆகஸ்ட் வரை 770 ஏக்கர் மட்டுமே விதைப்பு
காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி ஆகஸ்ட் வரை 770 ஏக்கர் மட்டுமே விதைப்பு
ADDED : செப் 12, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் வட்டாரத்தில் சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, உள்ளிட்ட பல கிராமங்களில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. செய்யாறு மற்றும் பாலாறு பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக ஆண்டு முழுதும் இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர்.
இப்பகுதிகளில் உற்பத்தி செய்யும் கரும்புகளை, மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்புகின்றனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் சர்க்கரைக்கு அரவை செய்யும் மொத்த கரும்பில் 40 சதவீதம், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள் சாகுபடி செய்கின்ற கரும்புகளாக உள்ளது.
இப்பகுதிகளில், கடந்த ஆண்டுகளின் போது கரும்பு வெட்ட உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் ஏராளமான ஆட்கள் இருந்தனர்.
இதனால், கரும்பு பயிரிடும் தொழிலாளர்களுக்கு கரும்பு வெட்ட எளிதாக ஆட்கள் வேலைக்கு கிடைத்தனர். ஆனால், தற்போதைய நிலையில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான தொழிலாளர்கள், சென்னையையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கும் சென்று விட்டனர்.
இதனால், இப்பகுதிகளில் கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காமல், கரும்பு விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரும்பு சாகுபடி, உத்திரமேரூர் வட்டாரத்தில்தான் பெரும்பகுதி நடக்கிறது.
மாவட்ட அளவில், 2023- - 24ம் நிதியாண்டில், 2,160 ஏக்கர் வேளாண் துறை வாயிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 1,476 ஏக்கர் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
அதேபோல, நடப்பாண்டிலும், 2,160 ஏக்கர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதுவரையிலான ஆறு மாதங்களில், 770 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி நடந்துள்ளதாக வேளாண் துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.
கரும்பு மட்டுமல்லாமல், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் ஆகியவையும் நடப்பாண்டில் குறைவான அளவிலேயே விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில், நவரை பருவத்திற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். நவரை பருவத்தில் அதிகளவில் விவசாயிகள் பயிரிடும்போது, இலக்கை எட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.