/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாசன கால்வாயில் கட்டட பணி எதிர்த்து வாடாதவூரில் ஆர்ப்பாட்டம்
/
பாசன கால்வாயில் கட்டட பணி எதிர்த்து வாடாதவூரில் ஆர்ப்பாட்டம்
பாசன கால்வாயில் கட்டட பணி எதிர்த்து வாடாதவூரில் ஆர்ப்பாட்டம்
பாசன கால்வாயில் கட்டட பணி எதிர்த்து வாடாதவூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 11:36 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூரில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக 3 கி.மீ., தூரத்திற்கான பாசன கால்வாய் உள்ளது.
ஏரி மதகு வழியாக வெளியேற்றக்கூடிய தண்ணீர், இந்த கால்வாய் வழியாக சென்று அப்பகுதியில் உள்ள 440 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய இந்த கால்வாயின் முழு தூரமும் அப்பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான நன்செய் பட்டா நிலத்தின் மீது, நில உரிமையாளர்கள் ஒப்புதல் பேரில் அப்போது அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவசாய நிலங்களில் சாலையையொட்டி உள்ள ஒரு பகுதியை, சில ஆண்டுகளுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தனிநபர் விலைக்கு வாங்கி உள்ளார்.
அந்நிலத்தில் தற்போது சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதற்காக கட்டடப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக பாசன கால்வாயில், 70 மீட்டர் தூரத்திற்கு தூர்த்து முதற்கட்ட பணியாக சிமென்ட் கான்கிரிட் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பணியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நிலத்தின் கால்வாயை தூர்த்து கட்டடம் கட்டுவதன் மூலம், கால்வாயை கடந்து அதற்கடுத்துள்ள 200 ஏக்கர் பரப்பிலான நிலங்களில் பாசனம் செய்ய முடியாமல் சாகுபடி பாதிக்கும் எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினுடன் பேச்சு நடத்தினர்.
உத்திரமேரூர் வட்டாட்சியர் உத்தரவின்படி, தற்காலிகமாக பாசன கால்வாயில் மேற்கொள்ளும் பணி நிறுத்தம் செய்வதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.