/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொற்று எதிரொலி குளோரின் கலந்து வினியோகம்
/
குடிநீர் தொற்று எதிரொலி குளோரின் கலந்து வினியோகம்
ADDED : ஜூன் 28, 2024 10:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் காலனியில், திறந்தவெளி கிணற்றில் இருந்து வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் ஏற்பட்ட தொற்று காரணமாக, கடந்த 14ம் தேதி 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதில், அசுவணி, 91, சரோஜா அம்மாள், 80, ஆகிய இரு மூதாட்டிகள் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தனர். சுகாதார பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என, ஊராட்சி செயலர், பம்ப் ஆப்பரேட்டர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வையாவூர் குடிநீர் மாதிரிகளை எடுத்து, கிண்டியில் உள்ள தண்ணீர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், வயிற்றுபோக்குக்கு காரணம், குடிநீரில் 'காலிபார்ம்' என்ற பாக்டீரியா தொற்று என தெரிய வந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட துணை சுகாதார இயக்குனர் செந்தில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்:
தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ளதால், குடிநீரில் பரவக்கூடிய நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில், குளோரின் கலந்த குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.
அதை, ஊராட்சி செயலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, தண்ணீர் வாயிலாக பரவும் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, லெப்டேஸ்பைரோஸிஸ் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. மேலும், தண்ணீரை காய்ச்சி, வடிகட்டிய பின் குடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.