/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., இன்று வேட்புமனு தாக்கல்
/
தி.மு.க., - அ.தி.மு.க., இன்று வேட்புமனு தாக்கல்
ADDED : மார் 25, 2024 05:44 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கலெக்டர் அலுவலகத்தில், கடந்த புதன்கிழமை துவங்கியது. காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில், கடந்த புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்களில், எந்தவொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், தி.மு.க., வேட்பாளர் செல்வம் ஆகியோர் மட்டுமல்லாமல், சுயேச்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதுவரை, தி.மு.க., - -அ.தி.மு.க., மட்டுமல்லாமல், சுயேச்சை வேட்பாளர்கள் என, 17 பேர், 28 வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளனர். பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, தேர்தல் வழி காட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலுக்கு, காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளர் செல்வம் இன்று ராகுகாலம் முடிந்து பிற்பகல் 12:00 மணி அளவில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மனு தாக்கலுக்கு முன், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய உள்ளார்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சியினர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, காஞ்சிபுரம் தி.மு.க., வடக்கு, தெற்கு மாவட்ட செயலர் அறிவித்து உள்ளனர்.

