/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு
/
காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 05:49 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், வருவாய் துறை சம்பந்தமாக, பொதுமக்களிடம் அதிகளவில் கோரிக்கை மனுக்கள் பெறும் தாலுகாவாக காஞ்சிபுரம் உள்ளது.
இங்கு, பரந்துார், சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம், திருப்புட்குழி, கோவிந்தவாடி, சிறுகாவேரிப்பாக்கம் என, ஆறு குறு வட்டங்கள் உள்ளன.
இதில், அதிகபடியான வருவாய் துறை பணிகள் மேற்கொள்ளும் குறுவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது.
காஞ்சிபுரம் குறுவட்டத்தில் வருமானம், இருப்பிடம், ஜாதி, வாரிசு, விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்று, முதல் பட்டதாரி சான்று என, அனைத்து வகையான சான்றுகளும், மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் வருவதால், வருவாய் ஆய்வாளருக்கு பணிச்சுமை ஏற்படுவதாக துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் குறுவட்டத்தின் கீழ், செவிலிமேடு, காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம், அரப்பணஞ்சேரி என, 10 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
இந்த, 10 கிராம நிர்வாக அலுவலருக்கு வரக்கூடிய வருவாய் துறை சான்றிதழ்களை, ஒரே ஒரு வருவாய் ஆய்வாளர் தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய போதிய அவகாசம் கிடைப்பதில்லை என்கின்றனர். மாதந்தோறும், சராசரியாக 3,000 பேர், பல வகையான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
இவற்றை, 14 நாட்களுக்குள் தீர்க்க சிரமம் ஏற்படுவதால், இரண்டாக பிரிக்க வேண்டும் என வருவாய் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் துறை ஊழியர்கள் கூறியதாவது:
சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போருக்கு, 7 நாட்களுக்குள் சான்றிதழை வழங்க வேண்டும். காஞ்சிபுரம் குறுவட்டத்தில் மட்டும், மாதந்தோறும் 3,000க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகர்ப்புறம் இந்த குறுவட்டத்திற்குள் இருப்பதால், மக்கள் தொகை அதிகம் உள்ளது. இதனால், ஏராளமானோர் பல வகையான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
குறிப்பாக, வாரிசு சான்றிதழ் வழங்க நேரில் விசாரணை நடத்தக்கூட போதிய நேரம், வருவாய் ஆய்வாளருக்கு கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல், சட்டம் - ஒழுங்கு விவகாரத்தையும், பட்டா விசாரணையும் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, காஞ்சிபுரம் குறுவட்டத்திற்கு மட்டும், 600க்கும் அதிக மனுக்கள் வந்துள்ளன.
இவற்றையெல்லாம் தீர்க்க, போதிய நேரமில்லாமல், பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும்.
மற்ற ஐந்து குறுவட்டத்தை காட்டிலும், காஞ்சிபுரம் குறுவட்டம் பணிச்சுமை மிகுந்தது. வருவாய் துறையினருக்கு அதிகபடியான வேலை உருவாவதால், ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வருவாய் துறையினரை அணுகுவதற்கு எளிதாக இருக்கும். பிரச்னைக்குரிய வாரிசு சான்றிதழ் வழங்குவதில் சிரமத்தை தவிர்க்கலாம். பொதுமக்கள் பட்டா மற்றும் பிற வருவாய் துறை பணிகளுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, குறுவட்டத்தை பிரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'காஞ்சிபுரம் குறுவட்டத்தை பிரிக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம்.
மாதந்தோறும் வரக்கூடிய விண்ணப்பங்கள், குறுவட்டத்தில் உள்ள ஊழியர்கள், பரப்பளவு, கிராமம், மக்கள் தொகை போன்ற விபரங்களை சேகரித்து அனுப்புவோம். இரண்டாக பிரிப்பதா அல்லது மூன்றாக பிரிப்பதா என முடிவுகள் இன்னும் எடுக்கவில்லை' என்றார்.