/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.2 கோடியில் தகனமேடை பணி இழுபறி பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பு
/
ரூ.2 கோடியில் தகனமேடை பணி இழுபறி பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பு
ரூ.2 கோடியில் தகனமேடை பணி இழுபறி பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பு
ரூ.2 கோடியில் தகனமேடை பணி இழுபறி பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பு
ADDED : பிப் 27, 2025 12:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், தாயார் குளம் உள்ளிட்ட சில இடங்களில், நவீன எரிவாயு மின் தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. நவீன தகன மேடைகளில், உடல்களை எரியூட்ட தேவைப்படும் விறகு, வறட்டி போன்றவை தேவைப்படாமல், நவீன முறையில் உடல்கள் எறியூட்டப்படுகின்றன.
இதனால், காஞ்சிபுரம் நாகலூத்துமேடு சுடுகாட்டிலும், நவீன முறையிலான தகனமேடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதை, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அமைக்க முடிவு செய்து, 2 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
திட்ட மதிப்பீட்டில், மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்கு தொகையாக இருக்கும். அவ்வாறு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்றில் ஒரு பங்கு நிதி, காஞ்சிபுரம் நகரின் முக்கிய வியாபாரிகள் வழங்கியுள்ளனர். மீதமுள்ள தொகையை, மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
கடந்த 2022 ல், தகனமேடைக்கான பணிகள் துவங்கிய நிலையில், தற்போது வரை பணிகள் முழுமை பெறாததால், உடல்களை எரியூட்ட முடியாத நிலை தொடர்கிறது. சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுமை பெறாமல் இழுபறியாக உள்ளது.
நவீன தகனமேடை பயன்பாட்டிற்கு வராததால், தாயார்குளம் சுடுகாட்டிற்கு உடல்களை எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சின்ன காஞ்சிபுரம் பகுதிவாசிகளுக்கு அதிகளவு பயனளிக்கும் இந்த நவீன எரிவாயு தகனமேடை, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சின்னகாஞ்சிபுரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.