/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோடை மழை எதிர்பார்ப்பில் விவசாயிகள்
/
கோடை மழை எதிர்பார்ப்பில் விவசாயிகள்
ADDED : ஏப் 28, 2024 01:27 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில், நவரை பருவத்தை தொடர்ந்து தற்போது சொர்ணவாரி பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
நவரை பருவத்திற்கு பயிரிட்ட நெல் பயிர்கள், 90 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து,அறுவடையான நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாம் போகமான சொர்ணவாரி சாகுபடிக்கு தேவையான பாசனம் கிடைக்க கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து, மருதம் கிராம விவசாயிகள் கூறியதாவது:
இந்தாண்டு இதுவரை கோடை மழை பெய்யாதது ஒரு வகையில் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. கோடை மழை பெய்திருந்தால், நிலங்களில் நெல் அறுவடை மற்றும் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதித்திருக்கும்.
இந்த ஆண்டு கோடைக்கு இதுவரை காற்று மழை இல்லாததால், நெல் விவசாயம் மட்டுமின்றி மாங்காய் மற்றும் புளியங்காய் விளைச்சலும் பாதிப்பு இல்லாமல் உள்ளது. எனினும், மழை இல்லாததால் எள், உளுந்து போன்ற பயிர் வகைகளுக்கு போதிய பாசனம் கிடைக்காத நிலை உள்ளது.
தற்போது சொர்ணவாரி பருவ சாகுபடி பணிகள் துவங்கி உள்ளதால், கிணறுகள் மற்றும் ஏரிகளில் நீர் இருப்பு தேவை உள்ளது. தற்போது கோடை மழை பெய்யும் பட்சத்தில் உஷ்ணம் தணிவதோடு விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்,
இவ்வாறு கூறினர்.

