/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்று கால்வாய் படுமோசம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
வேகவதி ஆற்று கால்வாய் படுமோசம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வேகவதி ஆற்று கால்வாய் படுமோசம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வேகவதி ஆற்று கால்வாய் படுமோசம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 25, 2025 02:14 AM

கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் ஒன்றியம் மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர், வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், மழைக்காலங்களில், கால்வாய் வாயிலாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்துவிடுவதால், நெல் நாற்று நடவு செய்துள்ள விவசாய நிலங்கள் மூழ்கி விடுகின்றன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் இருந்து, வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள 18 மதகுகள் வழியாக வெளியேறும் நீரானது, வேடபாளையம், அரசாணிமங்கலம், காட்டுப்பாக்கம், புலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மதகுகளில் இருந்து வெளியேறும் நீரானது, விளைநிலங்களுக்கு தடையின்றி செல்ல நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஏரியில் உள்ள 8வது மதகில் இருந்து செல்லும் நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.
மேலும், கால்வாய்களில் மண் துார்ந்துள்ளதால், ஏரி நீரானது தடையின்றி செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நீர்வரத்து கால்வாயை சீரமைக்க, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை இருந்து வருகிறது. துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
தொடர்ந்து, விளைநிலங்களுக்கு நீரை திருப்ப செல்லும் விவசாயிகள், கால்வாய் மீது நடந்து செல்ல முடியாத அளவுக்கு, கோரை புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.