ADDED : ஆக 20, 2024 08:31 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் உள்ள ஒரு கடையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், விமல், ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன், 33, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்தனர்.
அதேபோல், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து வந்த 'டாடா ஏஸ்' வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், ஒரகடம் பகுதில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்ட 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டிவந்த ராஜா, 36, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.