/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு அரங்கில் பார்த்தீனியம் செடிகளால் கேடு
/
விளையாட்டு அரங்கில் பார்த்தீனியம் செடிகளால் கேடு
ADDED : மே 02, 2024 01:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு, தினமும், காலை, மாலையில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை கால நீச்சல், தடகளம் உள்ளிட்ட பயிற்சி முகாம் நடைபெறுவதால், இப்பயிற்சியில் பங்கேற்க நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ - -மாணவியர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு விளையாட்டு வீரர்களும், வீராங்கனையரும் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்த, தினமும் பயிற்சி எடுக்க மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் வந்து செல்லும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், நீச்சல் குளம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள காலி இடத்தில் பார்த்தீனியம் செடிகள் புதர்போல செழித்து வளர்ந்து வருகிறது.
இந்த செடியின் விதைகள் காற்று மற்றும் நீரின் மூலம் பரவி நிலப்பகுதியில் முளைக்கும். அதிக மழை மற்றும் வறட்சியை தாங்கி வீரியத்துடன் வளரும் தாவர வகையைச் சேர்ந்தது.
கால்நடைகள் இச்செடியை உண்டால், குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மனிதர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கொப்புளம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படும் என்பதால், நச்சு செடியான இவைகள் சூற்றுச்சூழலையும் பாதிப்பதால், இந்த செடிகளை ஒழிக்க, 2011ல், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் செழித்து வளரும் பார்த்தீனியம் செடிகளால், விளையாட்டு அரங்கிற்கு வந்து பள்ளி மாணவ- - மாணவியர், விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர்,பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே, இச்செடிகளை வேருடன் அழிக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

