/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் சுதந்திர தின விழா கோலாகலம் 520 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்று
/
காஞ்சியில் சுதந்திர தின விழா கோலாகலம் 520 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்று
காஞ்சியில் சுதந்திர தின விழா கோலாகலம் 520 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்று
காஞ்சியில் சுதந்திர தின விழா கோலாகலம் 520 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்று
ADDED : ஆக 15, 2024 10:40 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், 78வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய 520 ஊழியர்களுக்கு, கேடயங்கள், சான்றிதழ்கள் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில், நேற்று, காலை 9:05 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சண்முகம் தலைமையில், காவலர்கள் அணி வகுப்பை, ஜீப்பில் சென்று கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் கலைச்செல்வி ஏற்றுக் கொண்டார்.
40 பயனாளிகள்
தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அமைதியை குறிக்கும் வகையில், வெள்ளை புறாக்களையும், மூவர்ண பலுான்களையும், கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி.,சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் பறக்க விட்டனர்.
அரசு பணியில், சிறப்பாக பணியாற்றிய, 520 அரசு ஊழியர்களுக்கு, கேடயங்கள், சான்றிதழ்களை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, வேளாண் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உட்பட 8 துறைகளின் கீழ், 10.17 லட்ச ரூபாய் மதிப்பில், 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
அதை தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்க்க, பொதுமக்கள் பலரும் வளாகத்தில் திரண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புறக்கணிப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மேயர் மகாலட்சுமி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர். மேயரின் ஆதரவு கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், எதிர்ப்பு கவுன்சிலர்கள் யாரும் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் சரிதா தேசிய கொடி ஏற்றினார். அதேபோல, காரை ஊராட்சி அலுவலகத்தில், வள்ளியம்மாள் தேசிய கொடி ஏற்றினார்.
இலுப்பப்பட்டு ஊராட்சியில், அதன் தலைவர் சுகுனா தேசிய கொடி ஏற்றினார். தேவரியம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில், அஜய்குமார் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

