/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழ்கதிர்பூர் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
/
கீழ்கதிர்பூர் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஆக 25, 2024 11:12 PM
காஞ்சிபுரம்:   காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனுபவத்தில் உள்ள, 600 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களுக்கு, பட்டா கேட்டு பல ஆண்டுகளாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலங்கள், அரசு அனாதீன வகைப்பாட்டில் உள்ளது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்காததால், வருவாய் துறை, மாவட்ட கலெக்டர், நில நிர்வாக கமிஷனர் என, அரசின் உயரதிகாரிகள் பலரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து கோரிக்கை மனு அளிப்பதால், விவசாயிகளின் அனுபவத்தில் உள்ள நிலங்களின் ஆவணங்களை, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் விசாரணை செய்துள்ளது. விசாரணை பெரும்பாலும் முடிந்த நிலையில், நில நிர்வாக கமிஷனருக்கு, விவசாயிகளின் கோரிக்கையை கருத்துருவாக அனுப்ப, கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, லோக்சபா தேர்தலின்போது, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, வாக்காளர் அடையாள அட்டையை, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், கீழம்பி- -- செவிலிமேடு புறவழிச்சாலையில் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், கீழ்கதிர்பூரில் அனாதீன நிலங்களுக்கு பட்டா வழங்குவது, விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து அடங்கல் சான்று வழங்குவது, அரசுக்கு பட்டா கோரிக்கையை பரிந்துரை செய்வது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, செப்.10ல், உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

