/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : மே 03, 2024 10:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மூன்று சன்னிதிகளிலும், பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது.
இதில், பரணீதர சாஸ்திரிகள் தலைமையிலான 20 வேத விற்பன்னர்கள், 20 சாஸ்த்ர வித்வான்கள் குழுவினர் யாகசாலை பூஜை நடத்தினர்.
நேற்று மூன்று சன்னிதிகளின் கும்பாபிஷேம் விமரிசையாக நடந்தது. காலை 10:05 மணிக்கு, மூன்று சன்னிதிகளுக்கும், காஞ்சி காமகோடி பீடம், பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து, அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர், சுரேஷ்வராச்சாரியார் உள்ளிட்ட விக்ரஹங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார மஹா தீபாராதனைமும் நடந்தன.
யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் கலசாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தன.
கும்பாபிஷேக விழாவில் முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஆலோசகர் ஜெயராமகிருஷ்ணன், அசோக் நகர் தண்டாயுதபாணி ஸ்தபதி, சென்னை சமஸ்கிருத கல்லூரி முதல்வர் மணி திராவிட், சென்னை ரமண சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஷார் அகத்தியர் கோவில்
காஞ்சிபுரம் அடுத்த விஷாரில், ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருட்குடில் அமைப்பு சார்பில் லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு சமீபத்தில் கருங்கற்களால் புதிதாக கோவில் கட்டப்பட்டு, பால விநாயகர், பாலசுப்ரமணியர் சன்னிதியும் அமைக்கப்பட்டது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 1ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, தனபூஜையும், மாலை 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட யாக சாலை பூஜை துவங்குகிறது.
நேற்று காலை 7:45 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து விநாயகர், முருகர், லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 9:00 மணக்கு மஹாபிஷேகமும், மஹாதீப ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. விழாவில், விஷார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாட்டை ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருட்குடில் நிறுவ தலைவர் குமரவேல், பொருளாளர் ரத்தினகுமார் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.