/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபயிற்சி பங்கேற்றோருக்கு மருத்துவ ஆலோசனை
/
நடைபயிற்சி பங்கேற்றோருக்கு மருத்துவ ஆலோசனை
ADDED : செப் 02, 2024 05:44 AM
காஞ்சிபுரம்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், மாதத்தின் முதல் ஞாயிறன்று, 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற எட்டு கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, செப்., மாதத்திற்கான, நடப்போம் நலம் பெறுவோம் இயக்கம் நேற்று காலை 'காஞ்சிபுரம் மாநகர நல அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு. மனோகரன், இணை செயலர் டாக்டர் வெ. முத்துகுமரன், மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு டாக்டர் மு.ராகுல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற நடைபயிற்சி இயக்கம், கலெக்டர் அலுவலக முதல் நுழைவு வாயிலில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது.
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக பேட்ஜ் வழங்கப்பட்டு, தொற்றாநோய் தடுப்பு மருத்துவ அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் திருப்புட்குழி வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.