/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கோரிக்கை பரிசீலனை
/
பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கோரிக்கை பரிசீலனை
ADDED : ஜூலை 12, 2024 10:24 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பால் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. உத்திரமேரூர் மற்றும் சுற்றிலும் உள்ள 1,400க்கும் மேற்பட்டோர் இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் பால் விற்பனை செய்கின்றனர்.
இந்த கூட்டுறவு சங்க பால் உற்பத்தி நிலையத்தில், வெண்டர் எனப்படும் பால் கொள்முதல் செய்யும் 11 பேர், தற்காலிக ஊழியர்களாக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என துறை சம்பந்தமான அதிகாரிகளிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், அதுகுறித்து நடவடிக்கை இல்லை. இந்நிலையில், உத்திரமேரூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்களான வெண்டர்கள் 11 பேரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் பணியை ராஜினாமா செய்வதாக, சென்னை பால் பண்ணை மேம்பாட்டு துறை ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பால்வள அலுவலர் ஆகியோரிடத்தில் கடந்த 8ம் தேதி கடிதம் வழங்கினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகள், பணியை ராஜினாமா செய்த ஊழியர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். அதில், பால் அத்தியாவசிய பொருள் என்பதால் பணியை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, அப்பணியாளர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ராஜினாமா முடிவை கைவிட்டு வெண்டர்கள் 11 பேரும் தற்போது பணிக்கு திரும்பி உள்ளனர்.